தினம் தினம் புதுப்புது தினுசான மோசடிகள் அம்பலமாகும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்பிக்கையோடு செய்யப்படும் ஒரு முதலீடு, மோசடிக்காரர்களால் அபகரிக்கப்படும்போது ஏற்படும் துயரம் அளவில்லாதது. இதில் பலர் தங்களது வாழ்நாள் உழைப்பையே பறிகொடுத்து விடுகிறார்கள். அதற்காக பணத்தை வீட்டிலேயே பூட்டி வைத்துப் பாதுகாக்க வேண்டுமா? அதுவும் சாத்தியமில்லை. ‘பணவீக்கம்’ என்ற புரியாத ஒரு விஷயம், கரையான் போல அந்தப் பணத்தை அரித்துவிடுகிறது. ஒரு காலத்தில் முன்னூறு ரூபாயில் ஒரு குடும்பத்தின் ஒரு மாத மளிகைத் தேவைகள் பூர்த்தியானது. இன்று மூவாயிரம் ரூபாயைத் தாண்டுகிறது செலவு.
ஆக, நமக்கு இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றன. அவை சேமிப்பும் முதலீடும். நிறைய பேருக்கு சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. இந்த இரண்டையும் பற்றி தெளிவாக விளக்கி, வழிகாட்டுகிறது நூல். பணம் பற்றிய இரண்டு விஷயங்கள் நமக்கு நிம்மதி தரும். ஒன்று, நமது சேமிப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரண்டு, நமது முதலீடு நல்லமுறையில் வளர வேண்டும். இந்த இரண்டுக்கும் வழிகாட்டும் ஒரு முழுமையான புத்தகமாக இது இருக்கிறது. எல்லா வகை சேமிப்புகள் பற்றியும் எல்லோருக்கும் புரியும்படி விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். அதோடு முதலீடுகளில் பாதுகாப்பானவை எவை எவை, ஆபத்தானவை எவை எவை எனவும் பிரித்துக் காட்டியிருக்கிறார்.
தங்களது பணம் பெருக வேண்டும் என நினைக்கும் எல்லோருக்குமான புத்தகம் இது.
.