‘வாழ்க்கையில் சாதிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கிறது; தோற்றுப் போகிறவர்களுக்கு அனுபவம் கிடைக்கிறது’ என்பார்கள். அந்த அனுபவம் கொடுக்கிற பாடம், வெற்றியைவிட மிகப் பெரியது. இப்படி உழைக்கும் மக்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து உருவாக்கிய சொலவடைகள் அத்தனையும், எழுதப்படாத இலக்கியங்கள். இவற்றின் அருமையை முதலில் உணர்ந்தவர்கள் ஐரோப்பியர்கள். நமது சொலவடைகளைத் தொகுத்து, அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்து அவர்கள் நூல்களை வெளியிட்டுள்ளார்கள். சில வார்த்தைகளாக இருக்கிறது ஒரு சொலவடை.
அது எந்தச் சூழலில் பிறந்திருக்கும், அது என்ன சொல்ல வருகிறது என்பதை உணராமல் அதை வெறுமனே படிப்பதில் அர்த்தம் என்ன இருக்கிறது? ‘தோணி போகும்; துறை நிற்கும்’ என்ற நான்கு வார்த்தை சொலவடை எவ்வளவு பெரிய வாழ்க்கை உண்மையை - உறவின் மறக்க இயலாச் சுமையை, பிரிவின் தாங்கொணா வலியை - உணர்த்திவிடுகிறது! இப்படிச் சொலவடைகளின் அர்த்தம் தேடி, அவற்றினூடாகப் பயணித்து, அந்த இலக்கியத்தை எல்லோரையும் புரிந்துகொள்ள வைக்கும் மகத்தான முயற்சியைச் செய்திருக்கிறார், தமிழகத்தின் முக்கியமான கல்வியாளர்களில் ஒருவரான பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள்.
உணர்வுகளை வெளிப்படுத்த, யோசனை சொல்ல, ஆறுதல் தர, அறிவுரை தந்து நெறிப்படுத்த, விமர்சனம் செய்து எச்சரிக்க, பிரச்னையான நேரத்தில் தீர்வுகள் தேடித் தர, சொலவடைகளைப் போலப் பயன் தருகிற எளிய இலக்கியம் எதுவும் இல்லை. கோபம், குமுறல், ஆற்றாமை, கழிவிரக்கம், வலி, சலிப்பு என அத்தனை மனச்சுமைகளையும் இந்தச் சொலவடைகளில் இறக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் மனக்கண்ணாடி வழியே இந்த வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்..