தமிழின் மதிக்கத்தக்க மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், கிட்டத்தட்ட 59 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருபவருமான அசோகமித்திரன் அவர்களை ஒரு வெகுஜன இதழில் முதல்முறையாகப் பத்தி எழுதவைத்த முயற்சியே இந்தப் புத்தகத்தின் தொடக்கம். ‘குங்குமம்’ இதழில் எழுதுவதற்கு அவரை அணுகியபோது, ஆச்சரியங்கள் காத்திருந்தன. இந்த 83 வயதில் அவர் கணினியில் தட்டச்சு செய்து கட்டுரைகளை அனுப்பிவைக்கத் தயாராக இருந்தார். பேனாவைப் பிடித்தால்தான் கற்பனை ஊற்றெடுக்கும் என நினைப்பவர்கள், அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தன் ஞாபக அடுக்குகளில் சேமித்துவைத்திருந்த கடந்தகால அனுபவங்களை, நிகழ்கால யதார்த்தத்தோடு ஒப்பிட்டு அவர் எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
அவரைத் தெரியாத யாரோ ஒரு இளம் வாசகர் இந்த நூலைப் படித்தால், தன் டீன் ஏஜில் இருக்கும் ஒரு எழுத்தாளர் இதை எழுதியதாக நினைக்கக்கூடும். மொழிநடையில் அத்தனை இளமை. பக்கம் பக்கமாக எழுதி விளக்கவேண்டிய விஷயங்களை ஒற்றை வரியில் தந்து பிரமிப்பூட்டும் லாவகம் அவருக்கு சர்வசாதாரணமாகக் கை வந்திருக்கிறது. அந்த ஒற்றை வரியைப் படித்து விட்டு பல நிமிடங்கள் யோசிக்கலாம். சினிமா, நாடகம், அரசியல், நிகழ்த்துக்கலைகள் என அவர் தொடாத இடங்களே இல்லை. ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்தபோதே ‘‘எப்போது இவை தொகுக்கப்பட்டு நூலாக வெளிவரும்?’’ எனக் கேட்ட வாசகர்கள் நிறைய. அவர்களுக்காக விரைவாகவே இந்நூல் வெளிவந்தது. ஐம்பது ஆண்டுகால தமிழகச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்த்தும் நூல் இது..