இலவசமாகக் கிடைக்கிற அறிவுரைகளிலும் ஆலோசனைகளிலும் முதலிடம் மருத்துவத்துக்கே! தெரிந்ததையும் தெரியாததையும் அடுத்தவருக்குச் சொல்ல ஆளாளுக்கு ஆயிரம் தகவல்கள் உண்டு. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என யோசிக்கிற யாருக்கும், தேடி வருகிற மருத்துவ ஆலோசனைகள் சரியா, தவறா என யோசிக்கத் தோன்றாது. அதிலும் குறிப்பாகப் பெண்களைப் பொறுத்தவரை தம் உடலில் நிகழும் மாற்றங்களை, திடீரென உணர்கிற அசாதாரண பிரச்னைகளை உடனுக்குடன் மருத்துவரிடம் ஆலோசித்து தீர்வுகள் பெறுகிறவர்கள் வெகு சிலரே.
பெண்ணின் ஆரோக்கியமே ஒரு குடும்பத்தின் நலனைப் பேணுவதற்கான அடிப்படை. இது மட்டுமல்ல... இதுவே ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைகிறது. இந்த வகையில் ‘மகளிர் மருத்துவம்’ என்ற இந்தத் தொகுப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மகளிர் மருத்துவத் துறையில் பல்லாண்டு அனுபவம் பெற்ற மருத்துவர்கள் அளித்துள்ள தகவல்கள், இந்நூலின் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன. இதைப் படிக்கும் ஒவ்வொரு தோழிக்கும் தன்னையும் தன் குடும்பத்தையும் பேணிப் பாதுகாக்கத் தேவையான விழிப்புணர்வு ஏற்படும் என்பதில் ஐயமே இல்லை.
.