வைரம், முத்து என பொக்கிஷம் போன்ற அரிதான வார்த்தை அணிகலன்களைக் கோர்த்துக் கவிதை புனைந்து, தமிழன்னையை அலங்கரிப்பதில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு நிகரில்லை. ‘குங்குமம்’ வாசகர்களுக்காக ‘வாசகர் கவிதைத் திருவிழா’ போட்டி ஒன்றை நடுவராக இருந்து அவர் நடத்த முன்வந்தார். அதன் விளைவுதான் இந்தப் புத்தகம்.
மக்கள்தொகைக்கு நிகரான கவிஞர்களின் எண்ணிக்கையைக் கொண்ட தமிழகத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் மூட்டை மூட்டையாக வந்து குவிந்த கவிதைகளிலிருந்து பத்து கவிதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி பத்து வாரங்கள் அவர் தேர்ந்தெடுத்த நூறு கவிதைகளே இந்த நூலை அலங்கரிக்கின்றன. தமிழ்த்தாயின் தலைமகனாக நின்று, அடுத்த தலைமுறைக் கவிஞர்களுக்கு அவர் எடுத்த பாடமும் இந்த நூலின் ஒரு அங்கமாக இருக்கிறது. தமிழில் கவிதை எழுத நினைக்கும் யாருக்கும் இது வழிகாட்டியாகவும் திசைகாட்டியாகவும் இருக்கும்.
கவிதைகளைத் தேர்ந்தெடுத்ததோடு தன் கடமை முடிந்தது என்று அவர் நினைக்கவில்லை. தமிழகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்து இந்தக் கவிஞர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து, அவர்களுக்கு விருதும் விருந்தும் கொடுத்து மகிழ்ந்தார். கவிப்பேரரசின் முன்னிலையில் தங்கள் கவிதைகளை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி அந்தக் கவிஞர்கள் நெக்குருகிப் போனார்கள்.அந்தக் கவிதை விருந்து உங்களுக்காக புத்தக வடிவில்...
.